சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் கலை பொக்கிஷம் ஒன்றும் இடம் பெற இருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டில் தயாரான வெள்ளி செங்கோல் நிறுவப்பட உள்ளது.
செங்கோலை பிரதமர் மோடியின் கையில் வழங்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றது.
இந்தியாவில் தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாராளுமன்றத்திற்கு பதிலாக புதிய பாராளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தற்போது கட்டுமான பணிகள் முடிந்து விட்டது. வரும் 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் கலை பொக்கிஷம் ஒன்றும் இடம் பெற இருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டில் தயாரான வெள்ளி செங்கோல் நிறுவப்பட உள்ளது. மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே இந்த செங்கோல் நிறுவப்பட உள்ளது.
சென்னையைச் சேர்ந்த உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடையினர் இந்த செங்கோலை தயாரித்தனர். இதை பிரதமர் மோடியின் கையில் வழங்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றது. இந்த குழுவில் மதுரை ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் உள்ளிட்டோர் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், ‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் பிரதமர் மோடியை சந்தித்து செங்கோலை பரிசளிப்பேன்’ என்றார். ஆதீனங்கள் குழுவுடன் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆதீனங்களை சேர்ந்த பாரம்பரிய இசை கலைஞர்களும் உடன் சென்றுள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது: – புதிய நாடாளுமன்ற கட்டிடம் 28-ந் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. அப்போது, 1947-ம் ஆண்டில் தமிழகத்தில் தயாரான தங்க முலாம் பூசப்பட்ட செங்கோல், மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்பட உள்ளது.
அதை பிரதமர் நரேந்திர மோடி நிறுவுகிறார். இந்த செங்கோல் பற்றிய அனைத்து ஆதாரங்களும் உள்ளன. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14 -ந் தேதி ஆதீனங்கள், குருமார்கள் ஊர்வலமாகச் சென்று, அந்த செங்கோலை முதல் பிரதமரான நேருவிடம் கொடுத்தனர். தற்போது அது அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது” என்றார்.