UPI டிஜிட்டல் பேமெண்ட் முறையில் சீனாவை முந்திய இந்தியா..!

ந்திய யூபிஐ பரிவர்த்தனைகளில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலகளாவிய கொடுப்பனவு மையமான பே செக்யூர் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள 40 சிறந்த மாற்று கட்டண முறைகளை பே செக்யூர் ஆய்வு செய்தது. இந்த நிலையில், பே செக்யூர் வெளியிட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வினாடிக்கும் 2,348 பரிவர்த்தனைகள் இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகளை யூபிஐ செயலாக்கியுள்ளதன் மூலம், இந்திய யூபிஐ பரிவர்த்தனைகளில் 58 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது. மேலும், சீனாவின் அலிபே, பேபால் மற்றும் பிரேசிலின் பிக்ஸ் ஆகியவற்றைவிடவும் யூபிஐ முந்தியுள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும், யூபிஐ பரிவர்த்தனைகள் 20.6 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதுவே ஒரு மாதத்தின் அதிகபட்சமானதாக உள்ளது. அதுமட்டுமின்றி, யூபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு, தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. மேலும், யூபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 131 பில்லியனில் இருந்து, 2028-29 ஆம் ஆண்டில் 439 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 40 சதவிகிதத்திற்கும் அதிகமான கொடுப்பனவுகள் டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன; அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு யூபிஐதான் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகை வழிநடத்துகிறது என்பது தெரிய வருகிறது. மேலும், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் 100 பில்லியன் பரிவர்த்தனைகளை எட்டும் திறன் யுபிஐக்கு உள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திலீப் அஸ்பே தெரிவித்துள்ளார்.