ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துவருகிறது.
இதற்கிடையே சிந்து நதி நீரை தடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக இந்தியா தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் ஜீலம் ஆற்றில் இந்தியா திடீரென தண்ணீரை வெளியேற்றியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது.
ஜீலம் நதியில் திடீரென அதிகரித்த நீரோட்டம் காரணமாக முஷாபர்பாத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் அருகே உள்ள ஹத்தியன் பாலா பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆற்றங்கரை ஓரம் செல்ல வேண்டாம் என உள்ளூர் பொது மக்களுக்கு மசூதி மூலமாக எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பதற்றம் அடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கெனவே சிந்து நதி பிரச்னையில் இரு நாடுகளுக்கும் இடையே சச்சரவு நீடிக்கும் சூழலில், ஜீலம் நதியை முன்வைத்து பாகிஸ்தான் அடுத்த கட்ட அரசியல் நகர்வை முன்னெடுப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் அதிகாரிகள், இந்தியா சர்வதேச விதிகள் மற்றும் நீர் ஒப்பந்தங்களை முழுமையாக மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.