இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இன்று அவசரமாக தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்துகிறது.
பாகிஸ்தான் அதிகாரிகள் பலரை வெளியேற்ற இந்தியா உத்தரவிட்டிருக்கிறது. எனவே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்துகிறது.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வெளிநாட்டை சேர்ந்த 2 பயணிகள் உட்பட 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். கடந்த 1990க்கு பிறகு சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது பயங்கரவாத அமைப்பான ல்கஷர்-இ-தொய்பாவின் இணை அமைப்பாகும். இதற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவுவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
முதற்கட்டமாக 1960ம் ஆண்டு சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாகவும், இந்த எல்லை வழியாக உரிய அனுமதியுடன் இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் மே-1ம் தேதிக்குள் வெளியேற வேண்டும். சார்க் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே மக்கள் தடையின் பயணிக்க விசா முறை எளிமைப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது இந்த நடைமுறையை இந்தியா கைவிடுவதாக அறிவித்திருக்கிறது.
இந்த நடைமுறையின் கீழ் கடந்த பாலத்தில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களும் ரத்து செய்யப்படுவதாகவும், எனவே இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த பாதுகாப்பு படை ஆலோசனை அதிகாரிகள் 1 வாரத்திற்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. பதிலுக்கு பாகிஸ்தானில் உள்ள நம்முடைய அதிகாரிகளும் அங்கிருந்து நாடு திரும்புவார்கள்.
இந்தியாவின் இப்படியான நடவடிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும், ராணுவ ரீதியிலான தாக்குதல் நடந்தால் அது இரு நாட்டிற்கு இடையே போராக வெடிக்காமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக இன்று பாகிஸ்தான் அரசு தேசிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. இக்கூட்டம் அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப்பின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
முன்னதாக தீவிரவாதிகள் தாக்குதல் பற்றி பேசிய பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர், “எங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்தான் பாக் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது தெரிய வரும்.