சில நாட்களுக்கு முன்பு நான் சமர்கண்டில் அதிபர் புதினை சந்தித்தேன். அப்போது அவரிடம், ‘இது போருக்கான சகாப்தம் அல்ல’ என தெரிவித்தேன். கடந்த மாதம் ரஷ்யா சென்றிருந்தபோது கூட, போர்க்களத்தில் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதை தெளிவாக கூறினேன். பேச்சுவார்த்தைகள், தூதரக நடவடிக்கைகள் மூலம்தான் இந்த தீர்வு கிடைக்கும். எனவே நேரத்தை வீணடிக்காமல் அதை நோக்கி நாம் நகர வேண்டும். எனவே இரு தரப்பும் ஒன்றாக அமர்ந்து பேசி, இந்த நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான வழிகளை காண வேண்டும். உக்ரைனில் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்று இந்திய பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி உக்ரைனுக்கு சென்றதன் மூலம் அந்த நாட்டுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமாக போரிட்டு வரும் உக்ரைன், நேற்று முன்தினம் முதல் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தை டிரோன்கள் மூலம் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த கடும் தாக்குதலுக்கு மத்தியில் பிரதமரின் உக்ரைன் பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி மற்றும் ஜெலன்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தையில் இந்தியா-உக்ரைன் இடையேயான வர்த்தகம், பொருளாதார பிரச்சினைகள், பாதுகாப்பு, மருந்துகள், வேளாண்மை மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் இரு நாடுகளுக்கு இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அந்த வகையில் வேளாண்மை மற்றும் உணவுத்துறையில் ஒத்துழைத்தல், மருத்துவ உற்பத்தி பொருட்கள் ஒழுங்கமைப்பு துறையில் ஒத்துழைத்தல், உக்ரைனில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மானிய உதவியை இந்தியா வழங்குதல் மற்றும் 2024-28 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான கலாசார ஒத்துழைப்பு ஆகிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.