அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிட்டனர்.
அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று(மார்ச் 9) தொடங்கியுள்ளது. இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ்-ம் தற்போது பார்வையிட்டனர்
இரு நாடுகளும் இணைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியுள்ளதை நினைவுகூறும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றே அகமதாபாத் நகருக்கு வருகை தந்தார். ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ்-ம் நேற்றே அகமதாபாத்துக்கு வருகை தந்தார்.
இன்று காலை 8.45 மணி அளவில் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து மைதானத்துக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ்-ஐ, பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், இருவரும் மைதானத்திற்குள் சென்றனர். அங்கு அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வாகனத்தில் நின்றவாறு இருவரும் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியின் தொடக்க ஆட்டத்தை பார்த்து ரசித்தனர்