சிங்கப்பூர் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு..!

டெல்லி: அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார்.

புருனே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி புருனே பயணத்தை முடித்துவிட்டு சிங்கப்பூர் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று காலை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

புரூனே நாட்டுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, சிங்கப்பூர் பிரதமரின் அழைப்பை ஏற்றி, அந்த நாட்டுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். Advertisement புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு நேற்று மாலை சென்றடைந்த பிரதமர் மோடியை அந்த நாட்டின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சரும் தமிழ் வம்சாவளியுமான கே. சண்முகம் நேரில் சென்று வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் வரவேற்று விருந்தளித்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முன்னிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், சுகாதாரம் மற்றும் மருத்துவம், கல்வி ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாடு மற்றும் இந்தியா-சிங்கப்பூர் செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் கூட்டாண்மை ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகியோர் AEM ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் குறைக்கடத்தி (செமிகண்டக்டர்) வசதியை பார்வையிட்டனர்.

சிங்கப்பூரை விட இந்தியாவில், உற்பத்தி சக்தி அதிகம். எனவே, இந்த துறை சார்ந்த நிறுவனங்களை இந்தியாவுக்கு கொண்டு வர, பிரதமர் பயணம் உதவும் என்று சொல்லப்படுகிறது. கம்ப்யூட்டிங், எலக்ட்ரானிக்ஸ், சோலார் பேனல்கள், மருத்துவ சாதனங்கள், ஆட்டோமோட்டிவ், விண்வெளி, LED விளக்குகள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), 5G தொலைத்தொடர்பு, கேமிங் கன்சோல்கள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், ஃபிட்னஸ் டிராக்கர்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், தொலைநோக்கிகள் போன்ற அறிவியல் கருவிகள் ஆகியவற்றில் செமிகண்டக்டரின் பயன்பாடுகள் இருக்கிறது. மேலும், மேற்குறிப்பிட்ட துறைகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே செமிகண்டக்டர் உற்பத்தியை அதிக அளவில் கையில் எடுக்க வேண்டிய நேரம் இந்தியாவுக்கு நெருக்கிவிட்டது. அந்த வகையில் பிரதமரின் சிங்கப்பூர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, முதன்முறையாக புருனே சென்ற பிரதமர் மோடிக்குசிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. புருனே நாடு கடந்த 1984ம் ஆண்டு பிரிட்டிஷ் இடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியா, புருனே இடையே தூதரக உறவு நீடிக்கிறது. இருதரப்பு உறவு 40 ஆண்டுகளை கடந்த போதிலும், இதுவரை இந்தியாவிலிருந்து எந்த பிரதமரும் புருனேவுக்கு சென்றதில்லை. அந்த வகையில், புருனே சென்ற முதல் இந்திய பிரதமர் என்பதால் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புடன் மரியாதை அளிக்கப்பட்டது. புருனே பட்டத்து இளவரசர் ஹாஜி அல் முஹ்ததீ பில்லா, பிரதமர் மோடியை வரவேற்றார். அங்கு சென்றதும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘நமது இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளை எதிர்நோக்குகிறோம். குறிப்பாக, வணிக, கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவதில் ஆவலுடன் உள்ளேன்’ என பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தங்கும் ஓட்டலுக்கு வந்த இந்திய வம்சாவளியினர் அங்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மாலையில், இந்திய தூதரகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்த மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். இதனை தொடர்ந்து அவர் தற்போது சிங்கப்பூரில் உள்ளார்.