2023-24 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6% அதிகரிக்கும்- கிரிஸில் கணிப்பு..!

புதுடெல்லி: ரஷ்யா – உக்ரைன் போரைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டது.

அதன் தொடர்ச்சியாக பணவீக்கம் தீவிரமடைந்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன.

உலகளாவிய பொருளாதார தேக்க நிலையில் இருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் உட்பட அமைப்புகள் குறிப்பிட்டு வந்தன. இந்நிலையில், மதிப்பீட்டு நிறுவனமான கிரிஸில் வெளியிட்டுள்ள கணிப்பில், ‘2023-24 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6% இருக்கும்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா சராசரியாக 6.8 சதவீதம் வளர்ச்சி காணும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடந்த ஓராண்டில் தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன் தாக்கம் அடுத்த நிதி ஆண்டில் தெரியவரும். உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரித்து வருகிறது. வரும் நிதி ஆண்டில் அது மேலும் வளர்ச்சி காணும். அதேபோல், நாட்டின் வருவாயும் மேம்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.