கோவை மாநகர் சரவணம்பட்டியை அடுத்த சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (50). இவர் திமுகவை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என இணையதளம் மூலம் விளம்பரப்படுத்தியுள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த ராமேஸ்வரத்தை சேர்ந்த கவிதா(36),என்ற பெண் வேலை வேண்டி அழைக்கவே தனது வீட்டில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என தெரிவித்து அழைத்து சென்றுள்ளார். கவிதா கடந்த ஏழாம் தேதி வேலைக்காக கோவையில் உள்ள சிவக்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கவிதாவை தனது வீட்டிலேயே பணியமர்த்திய சிவக்குமார் மற்றும் அவரது மனைவி சுதா வீட்டிலேயே தங்க அனுமதித்ததுடன் வீட்டு வேலையையும் வழங்கியுள்ளனர்.
இதனிடையே பணியில் சேர்ந்த மூன்று நாட்களுக்குப் பிறகு கவிதாவை கடுமையான வார்த்தைகளால் பேசிய சிவகுமார்
தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கோ வெளியிலே செல்லும் போது கவிதாவை வீட்டிற்குள் அடைத்து வைத்து கதவுகளை வெளியில் பூட்டு போட்டு பூட்டி சென்றுள்ளனர்.
இந்த சூழலில் நேற்று கவிதா, தனக்கு பிறந்தநாள் என்றும் தனது ஒரே மகன் தன்னை பார்க்க வருவான் என்று கூறிய போது அவரை தண்ணீர் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. மீண்டும் வழக்கம் போல் கதவுகளை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கவிதா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து இது குறித்து தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு சென்ற சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் கவிதாவிடம் விசாரணை நடத்திய போது தினசரி அவர் சித்திரவதை அனுபவித்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து வீட்டின் உரிமையாளரான சிவகுமாரை காவல்துறையினர் அழைத்த போது அவர் வெளியூரில் இருப்பதாக கூறவே அவரது மனைவி சுதாவை அழைத்த காவல்துறையினர் உடனடியாக வந்து கதவை திறக்குமாறு அறிவுறுத்தினர்.பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு அங்கு வந்த சுதா பூட்டிய கதவை திறந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை அடுத்து இரு தரப்பினரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் கவிதாவை தாக்கிய சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பேசிய கவிதா, தன்னை வேலைக்கு அழைக்கும் போது நல்ல மனிதர் போன்று சிவக்குமார் நடந்து கொண்டதாகவும் வேலைக்கு சேர்ந்து மூன்று நாட்கள் வரை நல்ல முறையில் நடந்து கொண்டதாகவும் பின்னர் தன்னை கடுமையான சொற்களால் திட்டுவது அடிப்பது போன்று சித்திரவதை செய்ததாக கூறினார். மேலும் அவரது மனைவியை விட்டு தன்னை அடிக்க சொல்லியதாகவும் இருவரும் தன்னை கொடுமை படுத்தியதாக தெரிவித்தார். மேலும் தண்ணீர் பாட்டில், இரும்பு கம்பி, பெல்ட் உள்ளிட்டவற்றை கொண்டும் தன்னை தாக்கியதாக கூறிய அவர் . சிவக்குமார் ஒரு சைக்கோ தனமாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டார். மேலும் சிவக்குமார் அமைச்சர் என கூறி கொண்டதாகவும் கட்சி ஆட்களை வைத்து அடித்து துன்புறுத்துவேன் இங்கு இதற்கு முன்பு இருந்த பணிப்பெண்ணையும் இவ்வாறு தான் செய்ததாகவும் தற்போது அந்த பெண் உயிருடன் இருக்கிறாளா என்று கூட தெரியவில்லை. நீ இங்கிருந்து செல்ல முயற்சித்தால் உனக்கு அதே நிலைமை தான் ஏற்படும் உனது மகனையும் கடத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறினார். மேலும் பாலியல் தொழில் செய்கிறாயா என சிவக்குமார் கேட்டதாக கூறினார். மேலும் வீட்டில் இருந்து சென்றால் திருட்டு பட்டம் கட்டி விடுவேன் என்று மிரட்டியாதாகவும் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.