கர்நாடகா, மகாராஷ்டிராவில் தீவிரமடையும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

பெங்களூர்: பன்றி காய்ச்சல் பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகா மற்றும், மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

பொதுவாக மழைக்காலங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும். அதேபோல இந்த பருவமழை காலத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருக்கிறது. பன்றிக்காய்ச்சல் H1N1 வைரஸ் மூலம் பரவுகிறது. இதனை இன்ஃப்ளூயன்ஸா என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு கேரளா, உத்தரப் பிரதேசம் மற்றும் மிசோரத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கர்நாடகாவில் இந்த தொற்று பரவல் வேகமெடுத்திருக்கிறது.

கர்நாடகாவை பொறுத்தவரை கடந்த ஜூலை 31ம் தேதி வரை, 855 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 7 மடங்கு அதிகமாகும். உயிரிழப்புகளை பொறுத்தவரை 5ஆக பதிவாகியுள்ளது. இது குறித்து, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் அன்சார் அகமது கூறுகையில், “நாங்கள் தொற்று பாதிப்பு குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். பெங்களூரில் தொற்று பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மருத்துவமனைகளில், ஒரு நாளைக்கு சராசரியாக 30 பேர் வருகிறார்கள் எனில், அதில் 20 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறது. H1N1 பாதிப்பை ஆர்டி-பிசிஆர் சோதனை மூலம் கண்டறிய முடியும். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, சோர்வு மற்றும் தலைவலி என சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகளே இருக்கும். ஆனால் உரிய சோதனை செய்வதன் மூலம்தான் இதனை உறுதி செய்ய முடியும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த அறிகுறிகள் அதிக அளவில் காணப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த அளவில், இந்த பாதிப்பு 70% அதிகரித்துள்ளது. இதுவரை 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஜனவரி 1ம் தேதி தொடங்கி தற்போது வரை இம்மாநிலத்தில் 1,402 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு இந்த பாதிப்பு 821ஆக இருந்தது. எனவே சுகாதாரத்துறை தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள், மூத்த குடிமக்களுக்கு உடனடியாக மருத்துவ சேவையை வழங்குவதை உறுதி செய்திருக்கிறது.