புதுடில்லி: தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுசேமிப்பு திட்டங்களில், ஜூலை- செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதங்களை, 0.30 சதவீதம் வரை உயர்த்தி நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ரிசர்வ் வங்கி, அதன் குறுகிய கால ரெப்போ வட்டி விகிதத்தை 2.50 சதவீதம் அளவுக்கு உயர்த்தி, 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, வங்கிகளும் டெபாசிட்டுகளுக்கான வட்டியை அதிகரித்தன. தற்போது, செப்டம்பர் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களிலும் மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.அதன்படி, ஜூலை- செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதங்களை, 0.30 சதவீதம் வரை உயர்த்தி நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம், ஓராண்டு கால டெபாசிட்டுக்கான வட்டி 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.மேலும், நிதியமைச்சகம் கூறியிருப்பதாவது: 2 மற்றும் 3 ஆண்டுகால டெபாசிட்களுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி7.5 சதவீதமாக நீடிக்கும். 5 ஆண்டுக்கால தொடர் வைப்புக்கான வட்டி விகிதம் 6.2 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள்’ சேமிப்பு திட்ட வட்டி மாற்றம் செய்யப்படாமல் 8 சதவீதமாக நீடிக்கும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8.2 சதவீதமாக நீடிக்கும்.தேசிய சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றுக்கான வட்டிவிகிதத்திலும் மாற்றம் இல்லை. சேமிப்பு டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் மாற்றமின்றி 4 சதவீதமாக நீடிக்கும். இவ்வாறு நிதியமைச்சகம் கூறியுள்ளது.