ஹேக், போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் ராணுவ அமைச்சருக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றம் பிடி வாரன்ட் பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் ஹேக் நகரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது.
இதில், 124 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் இறையாண்மை மற்றும் தேச நலன் கருதி இந்த அமைப்பில் இணையவில்லை. இந்நிலையில், அக்டோபர் 2023ல் இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்கள், அதைத் தொடர்ந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவின் மீது இஸ்ரேல் துவங்கிய போர், அதில் நடந்த போர்க்குற்றங்கள் ஆகியவற்றை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கரீம் கான் முன்வைத்தார்.காசாவில் நடந்த போர் குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, முன்னாள் ராணுவ அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோரையும், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்காக முக்கிய ஹமாஸ் தலைவர்களையும் கைது செய்து விசாரிக்கும்படி கோரினார்.இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ‘காசாவில் பொதுமக்கள் உயிரிழக்க நேரிடும் என்பதை தெரிந்தே அங்கு உணவு, மருந்து, தண்ணீர், எரிபொருள், மின்சாரம் ஆகிய அடிப்படை தேவைகளை இஸ்ரேல் ராணுவம் தடுத்து நிறுத்தியது என்பதை நம்புவதற்கான காரணங்கள் உள்ளன’ என தெரிவித்தது. இதற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, முன்னாள் ராணுவ அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோரை கைது செய்ய பிடி வாரன்ட் பிறப்பித்தது.
இதேபோல், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹமாசையும் கண்டித்தது. இஸ்ரேல் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதால், அவர்களுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கவில்லை. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரன்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சர்வதேச நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தாலும், அதை செயல்படுத்த போலீஸ் அமைப்பு கிடையாது. உறுப்பினராக உள்ள நாடுகள் தான் உதவ வேண்டும். எனவே, இந்த கைது வாரன்ட் வெறும் சலசலப்பை மட்டுமே ஏற்படுத்தும்.