கோவை உடையாம்பாளையம் சின்னவேடம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சாந்தி. இவர் கடந்த 2015 ஆம் வருடம் கோவை சாய்பாபா காலனியில் உள்ள ரெப்கோ வங்கியில் கடன் பெற்றுள்ளார். பின்பு அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கடன் வசூல் தீர்ப்பாயம் சென்று, வங்கிக்கு எதிராக மனு தாக்கல் செய்து உள்ளார். கடந்த ஜனவரி 30 ஆம் தேதி அன்று வழக்கறிஞர் வளர்மதி மற்றும் வங்கி மேலாளர் ஆகிய இருவரும் 20 க்கும் மேற்பட்ட ஆட்களை அழைத்து சாந்தியின் வீட்டிற்கு சென்று நுழைந்து தகராறில் ஈடுபடும் செல்போன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்பு அதைப் பற்றி காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்து உள்ளதாகவும், மேலும் சாந்தி இடம் அந்த சொத்தை தனக்கே விற்கும்படி வளர்மதி வற்புறுத்தியாத கூறப்படுகிறது.
இதனை பற்றியும் உடனடியாக கோவை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் சாந்தி மறுபடியும் மனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் பலமுறை சாந்தி வங்கிக்கு சென்று கடன் தொகையினை செலுத்தும் பொழுது வங்கி மேலாளரும் வழக்கறிஞர் வளமதியும் பணம் வாங்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று பிப்ரவரி ஒன்பதாம் தேதி வழக்கறிஞர் வளர்மதி மற்றும் வங்கி மேலாளர் தலைமையில் அடியார்களுடன் சாந்தியின் வீட்டில் நுழைந்து அவரது வீட்டில் குடியிருக்கும் நபர்களை வெளியே துரத்தி மற்றும் சாந்தியை பார்த்து தவறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி உள்ளனர். அத்துமீறி நடந்து கொண்டு சாந்தியினை வெளியே தள்ளி வீசி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு இடையில் சாந்தியின் முடியை பிடித்து இழுத்து தவறாக நடந்து உள்ளதாகவும் இதனை தட்டிக்கேட்ட சாந்தியின் மகனையும் தாக்கி உள்ளதாகவும், மேலும் வழக்கறிஞர் வளர்மதியின் தூண்டுதலின் பேரிலே இது நடந்து உள்ளதாகவும் பெண் என்றும் கூட பாராமல் சாந்தியினை பலமாக தாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சாந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் சாந்தியை கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
கடன் தொகையினை தராவிட்டால் நீதிமன்றம் மூலமாகவே பிரச்சனைகளை தீர்க்கும் காலகட்டத்தில் இப்படி வழக்கறிஞர்களை வைத்து அத்துமீறி ஒரு பெண் என்று கூட பார்க்காமல் சாந்தியை தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இது போன்ற வங்கிகள் வழக்கறிஞர் என்ற பெயரில் ஆட்களை வைத்து கடன் வசூலிப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.