20 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணை…அமைச்சர் பொன்முடி இன்று மாலை மீண்டும் நேரில் ஆஜராக சம்மன்.!!

சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் 20 மணி நேரம் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். முந்தைய திமுக ஆட்சியின்போது செம்மண் குவாரியை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை வீடு, கே.கே.நகரில் உள்ள உறவினருக்கு சொந்தமான மருத்துவமனை, விழுப்புரத்தில் உள்ள வீடு, நிதி நிறுவனம், கல்லூரி ஆகிய இடங்களில் நேற்று காலை 7 மணிமுதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், 13 நேரத்துக்குப் பின் இரவு 8 மணிக்கு அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அமைச்சர் பொன்முடியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணியிடம் வீட்டில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அதிகாலை 3 மணியளவில் அமைச்சரின் சைதாப்பேட்டை இல்லத்தில் நடைபெற்ற சோதனையும் நிறைவடைந்தது. 20 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மற்ற பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையும் நேற்றிரவு நிறைவடைந்தது.மேலும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து 7 மணி நேரம் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், அதிகாலை 3.30 மணிக்கு அங்கிருந்து வெளியேறிய அமைச்சர், சைதாப்பேட்டை இல்லத்துக்கு திரும்பினார்.இந்நிலையில், அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி ஆகிய இருவரும் இன்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.