திருச்சி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் அலுவலகம் வைத்து தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறார் இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதாகி சிறை சென்ற பிரபாகரன் நிபந்தனை பிணையில் வெளியே வந்தார். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் நேற்று இரவு 7:00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டுள்ளார். இதனை தொடர்ந்து அருகில் உள்ள தனது அலுவலகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் முகமடி அணிந்து கொண்டு பிரபாகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டி தள்ளினர். பின்னர் கொலையாளிகள் நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுப்பற்றி தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, கொலை நடந்த அலுவலகத்தில் மாநகர காவல் துணை ஆணையர் அன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டது. இதற்கிடையில் பாமக மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் என்பவருக்கும் இவருக்கும் கார் வாங்க விற்பது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இவரிடம் கடந்த சனிக்கிழமை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
மேலும் நாளை மீண்டும் இந்த விசாரணைக்கு ஆஜராகி உள்ள நிலையில், 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் உரிமையாளர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை மாநகர காவல் துணை ஆணையர் அன்பு கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.