ஐபிஎல் 2024!! ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கொல்கத்தா..!

கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது பிளேஆஃப் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிபயர்-1 போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் , அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். ஹைதராபாத் அணிக்கு ஆட்டம் தொடக்கமே சிறப்பாக அமையவில்லை ஏனென்றால் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 2-வது பந்திலே ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்து ராகுல் திருப்பாதி களமிறங்க மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா அடுத்த ஓவரிலே 3 ரன்கள் எடுத்திருந்தபோது ரஸ்ஸலிடம் கேட்சைக் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 9 ரன்களும், ஷாபாஸ் அகமதுகோல்டன் டக் அவுட் ஆகி நடையை காட்டினார். இதனால் ஹைதராபாத் அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டை சீரான இடைவேளையில் இழந்தனர்.

பின்னர் கிளாசென், ராகுல் திருப்பாதி இருவரும் நிதானமாக விளையாடி சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர். இருப்பினும் கிளாசென் 32 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார். இதற்கிடையில் சிறப்பாக விளையாடி வந்த ராகுல் திருப்பாதி 55 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். கடைசியில் களமிறங்கிய கேப்டன் கம்மின்ஸ் நிதானமாக விளையாடி 30 ரன்கள் சேர்த்தார்.

இறுதியாக ஹைதராபாத் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தனர். கொல்கத்தா அணியில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டையும், சக்கரவர்த்தி 2 விக்கெட்டையும் பறித்தனர். 160 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொங்கியது முதல் ரஹ்மானுல்லா அதிரடியாக விளையாடி வந்தார். 14 பந்தில் தலா 2 சிக்ஸர், 2 பவுண்டரி விளாசி 23 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் களமிறங்க அடுத்த சில நிமிடங்களில் தொடக்க வீரர் சுனில் நரைன் சிக்ஸர் அடிக்க முயன்றபோது வியாஸ்காந்திடம் கேட்ச் கொடுத்து 21 ரன்னில் வெளியேறினார்.

பின்னர், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அரைசதம் அடித்து வெங்கடேஷ் ஐயர் 51* ரன்களுடனும், ஷ்ரேயாஸ் ஐயர் 58* ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி காரணமாக கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக சென்றது. நாளை எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூர் அணி மோதுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெறும் 2-வது குவாலிபயர் போட்டியில் ஹைதராபாத் அணிமோதவுள்ளது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற உள்ளது.