கோவை ஏப்23 நாட்டில் பல்வேறு நகரங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட்டை வைத்து பல இடங்களில் சூதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் கடந்த 11-ஆம் தேதி நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 7பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.ஒன்றரை கோடி பணம் ,7 செல்போன்கள் மற்றும் சொகுசு காரர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூதாட்டத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா?என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்போது ஐ.பி.எல். போட்டி நடந்து வருவதால்யாராவது சூதாட்டத்தில்ஈடுபட்டு வருகிறார்களா? என்பது குறித்தும் தனிப்படைபோலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் .இந்த நிலையில் செல்வபுரத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டை வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் ரகசிய தகவல் வந்தது.
போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் தலைமையில்தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பொன்னைராஜபுரம் அருகே 2 பேர் செல்போன்களை வைத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த இருவரையும் பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.அதில் அவர்கள் கோவை வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 39) பொன்ராஜபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ( வயது 39) என்பதும் ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்த அணிகள் மோதினாலும் அந்த அணியில் வெற்றி பெறுவது யார்? என்பது குறித்து ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது .இதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒன்றரை லட்சம் ரொக்க பணம், ஒரு சொகுசு கார், ஒரு பைக் , 2விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த சூதாட்டத்தில் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.