இர்ஃபான் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல… புகார் அளித்துள்ளோம் – மா.சுப்பிரமணியன் பேட்டி.!!

யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல’ என்று பேசியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

குழந்தை பிறந்தபோது, பிரசவ அறைக்குச் சென்று குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியிருக்கும் இர்ஃபான், அதனை வீடியோவாகவும் எடுத்து அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக குழந்தையின் பாலினத்தை துபாய் சென்று அறிந்துகொண்ட இர்ஃபான், எந்தக் குழந்தை எனத் தெரிவிக்கும் வீடியோவை யூடியூபில் வெளியிட்டது சர்ச்சையானது. தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகளில் இர்ஃபான் சிக்குவது பேச்சுபொருளாகியிருக்கும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்துப் பேசியுள்ளார்.

மதுரையில் இராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ 9.90 கோடி மதிப்பீட்டில் புதிய Cath lab மற்றும் மருத்துவ உபகரணங்கள், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொது சுகாதார ஆய்வகம் ஆகியவை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அப்போது இர்ஃபான் குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, “கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்ளக் கூடாது என சட்டம் இருக்கும் நிலையில், கடந்த வருடம் துபாய் சென்று அதைத் தெரிந்துகொண்டுவிட்டார். தகவல் தெரிந்த உடனேயே அவர் மீது நடவடிக்கை எடுக்க நோட்டிஸ் அனுப்பினோம். பின்னர் அவர் அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டார்.

இந்த நிலையில் தற்போது அவருடைய குழந்தைக்கு அவரே தொப்புள் கொடியை அறுத்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்க செயல்.

மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறுவை சிகிச்சை நடக்கும் அறைக்குள் மருத்துவர் அல்லாத ஒருவர் சென்று, தொப்புள் கொடியை துண்டித்திருப்பதென்பது National Medical Commission Act 2021, பிரிவு 34, செக்ஷன் 1,2-ஐ மீறுவதாகும்.மருத்துவச் சட்ட விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது. செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க டி.எம்.எஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் மட்டுமல்லாமல் அவரை மருத்துவமனைக்குள் அனுமதித்த பெண் மருத்துவர் நிவேதிதா, ரெயின்போ தனியார் மருத்துவமனை மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிவேதிதா மருத்துவ பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மருத்துவ கவுன்சிலில்லும் நோட்டிஸ் அளித்திருக்கிறோம். சட்ட ரீதியாகவும் துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இர்ஃபான் குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டது துபாயில் அல்லாமல் நம் ஊரில் நடந்திருந்தால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தை மூடியிருப்போம்.” என்று பேசினார்.