ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்த நாளில் இருந்தே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அத்தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கே அங்கு சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
பாமக தேர்தலில் இருந்து ஒதுங்கிய நிலையில், தேமுதிக இடைத்தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ளது.
இந்தநிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெறுள்ள பாரதிய ஜனதா கட்சியும் இடைத்தேர்தல் கோதாவில் குதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, கொங்கு பகுதியில் செல்வாக்கை அதிகரிக்க இடைத்தேர்தலில் போட்டியிடலாமா என்று பாஜக மேல்மட்ட தலைவர்கள் யோசித்து வருகிறார்களாம்.
இதுகுறித்து நேற்று ஈரோடு கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆலோசனை நடத்தினார். அதில் கலந்துகொண்டு பேசிய அம்மாவட்ட நிர்வாகிகள், இடைத்தேர்தலில் நாம் நிச்சயம் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த பாஜக தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.