தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவுவதால், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு தலைமைச் செயலகத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடுதலைமைச் செயலக சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
2006-11 திமுக ஆட்சிக்காலத்தில், முதல்வராக மு.கருணாநிதி பொறுப்பு வகித்தபோது, தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்யும் நோக்கில், அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் பேரவை, தலைமைச் செயலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு, திறக்கப்பட்டன.
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்ததும்,சட்டப்பேரவை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டை மன்ற அரங்குக்கு மாற்றப்பட்டது. அத்துடன், தலைமைச் செயலகக் கட்டிடம் அரசு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டதால், தலைமைச் செயலகம் மீண்டும் ஓமந்தூரார் தோட்டத்துக்கு மாற்றப்படுமா என்றகேள்வி எழுந்தது. ஆனால், அவ்வாறு மாற்றப்படாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது தலைமை செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடியை கருத்தில் கொண்டு, தலைமைச் செயலகத்தை மாற்றும்படி தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர்மு.க.ஸ்டாலினுக்கு, தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில், ”தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி பெரிய பிரச்சினையாக உள்ளது. பழைய கட்டிடத்தில் பணியாளர்கள் எளிதாக நடமாட முடியாத நிலை உள்ளது. தீ விபத்துகள் நேரிட்டால், பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்படும். மேலும், பணியாளர்களின் வாகனங்களை நிறுத்துவதிலும் சிரமம் உள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. சில தளங்களில் மேல்புற பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன. எனவே, ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கட்டிடத்துக்கு தலைமைச் செயலகத்தை உடனடியாக இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது..