திருச்சி சமயபுரம் கோவிலில் 7 நாட்களில் இவ்வளவு காணிக்கையா..?

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது.. எனவேதான், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளையும், உண்டியலில் செலுத்தி வணங்கி வருகிறார்கள்.
தன்னார்வலர்கள்: இவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில் பல்வேறு தன்னார்வலர்கள் கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில், ஒரு குறிப்பிட்ட நாள் இடைவெளியில் எண்ணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், அதன்படி, கடந்த 5 நாட்களில் உண்டியல்களில் செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணப்பட்டது.. நேற்றைய தினமும் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில், தன்னார்வலர்கள், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினார்கள்.. காணிக்கைகளை எண்ணியதில் 55 லட்சத்து, 95 ஆயிரத்து, 692 ரூபாய் ரொக்கமும்,1 கிலோ 100 கிராம் தங்கமும், 3 கிலோ 100 கிராம் வெள்ளியும், 151 அயல்நாட்டு நோட்டுகளும், 885 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.
அதேபோல், சமயபுரம் கோயிலின் உபகோயில்களான அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 362 ரொக்கமும், அருள்மிகு உஜ்ஐயினி மாகாளியம்மன் கோயில் உண்டியலில் ரூ.26,019 ரொக்கமும், அருள்மிகு போஜீஸ்வரர் கோயிலில் ரூ.5008-ம் காணிக்கைகளாக கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த வாரம் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் 1 கோடியே, 27 லட்சத்து, 82 ஆயிரத்து, 683 ரூபாய் ரொக்கமும், 3 கிலோ 785 கிராம் தங்கமும், 4 கிலோ 430 கிராம் வெள்ளியும், 327 அயல்நாட்டு நோட்டுகளும், 1444 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றிருப்பதாக கோயிலின் இணை ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்திருந்தது பெரும் ஆச்சரியத்தை கிளப்பியிருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற தங்கத்தை தரம்பிரித்து எடை போடும் பணி நடைபெற்றது.. கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 300 கிலோ 675 கிராம் தங்கத்தை தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணியில், சுப்ரீம்கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ, ஹைகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, ஆர்.மாலா ஆகியோர் தலைமையில் இப்பணிகள் நடந்திருந்தன.
காரணம், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம் எல்லாமே, ஒரே மாதிரியான தரத்துடன் இருக்காது. அதனால்தான், அவைகளை தரம்பிரித்து, பாரத ஸ்டேட் வங்கிமூலமாக மும்பையில் உள்ள அரசின் உருக்காலைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு 24 காரட் சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி, ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யப்படும். இதனை தொடா்ந்து, சுத்த தங்கத்திற்கான மதிப்பின் அடிப்படையில் தங்கப் பத்திரம் பெறப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி கோயில் வருவாயில் சோ்க்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.