ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் – ராஜ்நாத் சிங் கடும் கண்டனம்..!

ம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த குழந்தை உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். 33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் யார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றும் அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர். பேருந்தில் இருந்தவர்கள் சிவ கோரி குகைக் கோயிலில் இருந்து ரியாஸி மாவட்டத்தில் உள்ள கத்ராவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. யாத்ரீகர்களுக்கு எதிரான இந்த கொடூரமான செயலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.