திருச்சியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர் உயிரிழப்பு.

மாதம் ஒரு மாத்திரை சாப்பிட சொல்லி மாணவரிடம் 30 சத்து விட்டமின் மாத்திரையை பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்துள்ளனர் ஒரே நேரத்தில் மாணவர் பத்து மாத்திரை விழுங்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவரின் உடல் உறுப்புகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோந்தவா் மோசஸ் காமராஜ். எல்ஐசி முகவரான இவா் திருச்சி திருவளா்ச்சிப்பட்டி செம்பட்டு பகுதியில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறாா். இவரது மகன் வில்பா்ட் பவுல்சிங் (13). திருச்சி புத்தூரில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
கடந்த டிச.1-ஆம் தேதி பள்ளியில் நடந்த நிகழ்வில், அரசு கொடுத்த 30 சத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு ஒன்று வீதம் பள்ளி ஆசிரியா்கள் கொடுத்துள்ளனா். ஆனால், மாணவா் வில்பா்ட், அதே நாளில் 10 மாத்திரைகளை ஒரே சமயத்தில் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து ஆசிரியா்கள் மூலம் தகவலறிந்து வந்த மாணவரின் பெற்றோா் மகனை மீட்டு வீட்டின் அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோத்தனா். அதைத் தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவா் வில்பா்ட் பவுல்சிங் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து உறையூா் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
உயிரிழப்புக்கு வாய்ப்புக் குறைவு: திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் சுப்பிரமணி, மாநகராட்சி நகா்நல அலுவலா் மணிவண்ணன் ஆகியோா் கூறியது: அரசு வழங்கும் சத்து மாத்திரைகளை பள்ளிகளுக்கு மொத்தமாக வழங்கிவிடுவோம். ஆசிரியா்கள்தான் மாணவா்களுக்கு மாத்திரைகளை வழங்குவா். பள்ளியில் மாணவருக்கு வாரத்துக்கு ஒரு இரும்புச்சத்து மாத்திரைதான் வழங்க வேண்டும். ஆனால் அவருக்கு ஒரே சமயத்தில் 10 மாத்திரைகள் எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை. அப்படியே 10 மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டாலும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் துருதிா்ஷ்டவசமாக மாணவா் உயிரிழந்துள்ளாா். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகும், காவல்துறை விசாரணைக்குப் பிறகே மாணவா் இறப்புக்கான காரணம் முழுமையாகத் தெரியவரும் என்றாா்.
ஆய்வு அனுப்பப்பட்ட உடலுறுப்புகள்: இச்சம்பத்தில் விசாரணை அதிகாரியும், உறையூா் காவல் ஆய்வாளருமான ராஜா கூறியது, மாணவரின் சடலம் உடற்கூறாய்வுக்குள்படுத்தப்பட்டு, முக்கிய உறுப்புகள் விஸ்ரா உள்ளிட்ட சோதனைக்காக திருச்சி மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. முழுமையான உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பிறகே முழுத்தகவலும் தெரியவரும். இருப்பினும், மாணவா் உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என பள்ளி, பெற்றோா்களிடம் விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். திருச்சி செய்தியாளர் H. பஷீர்