பொது பாதுகாப்பு கருதி மொபைல் நெட்வொர்க்கை கைப்பற்ற அரசுக்கு அதிகாரம்…

புதுடெல்லி: கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. இதற்கு நடுவே, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொலைத்தொடர்பு மசோதாவை நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: பேரிடர் மேலாண்மை உட்பட ஏதேனும் பொது அவசர நிலை அல்லது பொது பாதுகாப்பு நலன் கருதி மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது மத்திய – மாநில அரசால் சிறப்பு அதிகாரம் பெற்ற அதிகாரி எந்தவொரு தொலைத்தொடர்பு நெட்வொர்க்கையும் தற்காலிகமாக கையகப்படுத்த முடியும்.

தேசிய பாதுகாப்பு விதியின் கீழ் ஊடகவியலாளர்கள் அனுப்பும் செய்தி தடைசெய்யப்பட்டாலன்றி, அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களிடமிருந்து வரும் செய்திகள் தடுக்கப்படாது. இவ்வாறு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, நலன் கருதி தனிநபர்களுக்கு இடையே எந்த செய்தியையும் இடைமறிக்கலாம் என்று வரைவு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று எந்தவொரு தொலைத்தொடர்பு சேவையையும் நிறுத்திவைக்கவும் அரசுக்கு அந்த மசோதாவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.