கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கோபு (வயது 61). ஓய்வு
பெற்ற விமானப்படை அதிகாரி.
கடந்த மாதம் 17-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன்
சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அப்போது கோபு வீட்டின் முன்
பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில்
இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வலையல் உள்பட 2
பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி
அன்போணி (வயது 65). ஓய்வு பெற்ற ஹெல்த் சூப்பர்வைசர். கடந்த 3-ந் தேதி
இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது சகோதரர்
வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், கம்மல் உள்பட 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அன்போணி காரமடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.