கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை மாரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் உள்ள வைர நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி சாந்தாமணி (43). இவர் காரமடை பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்து வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அவரின் கடையின் பூட்டு உடைத்து மர்ம நபர்கள் கடையில் இருந்த 13 பவுன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சாந்தாமணி காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 3 தனிப்படை அமைத்து கடை மற்றும் அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த காட்சியை வைத்து கொள்ளையனை தேடி வந்தனர். அப்போது கொள்ளையன் கேரளாவில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா மாநிலம் கண்ணூர் விரைந்தனர். அங்கு போலீசார் முகாமிட்டு கொள்ளையனை தேடி நெல்லிகுந்து என்ற இடத்துக்கு சென்றனர். அங்கு கொள்ளையன் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தார்.
உடனே போலீசார் கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் கொள்ளையனை கோவை காரமடை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையன் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நெல்லிகுந்து பகுதியை சேர்ந்த தங்கச்சி மாருதி (52) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து வெள்ளி பொருட்கள் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் தங்கச்சி மாருதியை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.