சென்னை: மத்திய அரசின் ரோஜ்கார் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடக்கிறது. அந்த கண்காட்சியில் பங்கேற்கும் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்குகிறார்.
கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மத்திய அரசுத் துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதனடிப்படையில், அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் (Mission Mode Recruitment) மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி அப்போது அறிவுறுத்தினார்.
இந்நிலையில், நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் `ரோஜ்கார் மேளா’வை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிவைத்தார். நாட்டின் பல்வேறு நகரங்களில், ஒரே நேரத்தில் காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்கட்டமாக 75,226 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்ததைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு சார்பில் 75 ஆயிரம் இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதில், சுமார் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்குகிறார். அத்துடன், அவர்களிடையே உரையாற்றுகிறார். வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை 71 ஆயிரம் பேருக்கும் காகித வடிவிலான பணி நியமன கடிதங்கள், நாடு முழுவதும் 45 இடங்களில் நேரடியாக வழங்கப்படுகின்றன.
சட்டசபை தேர்தல் நடக்கும் குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்நிகழ்ச்சி நடைபெறாது. வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை இது காட்டுவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இது தூண்டுகோலாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைன் புத்தாக்க பயிற்சி திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.
வரும் 2030ஆம் ஆண்டில் இந்தியாவில் குறைந்தபட்சம் 9 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் என்று சர்வதேச நிதி அமைப்புகள் சுட்டிக் காட்டி உள்ளன. இதை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முத்ரா யோஜ்னா உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்திய இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக நாடு முழுவதும் இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த ரூ.12,000 கோடியில் ‘ஸ்கில் இந்தியா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Leave a Reply