ஜே.பி.நட்டா நாளை தமிழகம் வருகை – பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை.!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில தொடங்கி வைத்தாா்.

இந்த யாத்திரையின் முதற்கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில், ‘என் மண் என் மக்கள்’ நாளை சென்னையில் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் சென்னை பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை சென்னை வருகிறார். இவரது இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. நாளை சென்னை வரும் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்ற பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஜே.பி.நட்டா நாளை தமிழகம் வருகிறார். பிரதமரின் வருகைக்கு முன்பு கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் தமிழக பாஜக உள்ளது. அந்தவகையில், சென்னையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாளை மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை சின்னமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை பிற்பகல் 12 மணிக்கு நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக மைய நிர்வாகிகள் குழு ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. இதன்பின் நாளை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.