கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்… பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு..

ள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தமிழகத்தையே கதிகலங்க செய்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகையை அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த துக்க வீட்டு நிகழ்விற்காக வந்த சிலர் அங்கு விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்தியதாக கூறப்படுகிறது. மெத்தனால் கலந்த இந்த கள்ளச்சாராயம் குடித்த மேலும் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் உயிரிழந்து வருவதால் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை துவங்கி சபாநாயகர் அப்பாவு தலைமையில் துவங்கியது. இன்று கூட்டம் துவங்கிய போது மறைந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி, மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திரகுமாரி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 30 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் மற்றும் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர சிபிஎம் கட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. சிபிஎம் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் நாகை மாலி இந்த தீர்மானத்திற்கான கடிதத்தை வழங்கியுள்ளார். இதேபோல் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி அதிமுக சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகையை முதல்வர் அறிவித்து உத்தரவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கவும் அறிவித்துள்ளார். கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.