சென்னை : கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வாட்ஸ் அப் குழு அமைத்து வதந்தியை பரப்பியதாக சென்னையில் 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் கடந்த 17ம் தேதி வன்முறையாக வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளியில் இருந்த மாணவர்களின் கல்வி சான்றிதழ்கள், பள்ளி வாகனங்கள் தீக்கரை ஆக்கப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 320க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக போராட்டக்காரர்கள் இணைந்த வாட்ஸ்அப் குரூப் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியது.
ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டும் என்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு, அதில் ஏராளமான நபர்கள் இணைந்து இருந்த விவரங்கள் கள்ளக்குறிச்சி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குழுவின் மூலமாகவே ஒரே நாளில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் வாட்ஸ் அப் குழு அமைத்து வதந்தியை பரப்பியதாக 4 மாணவர்களை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே மாணவியின் மரணம் தொடர்பாக போராட்டம் வதந்திகள் பரவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 உதவி ஆணையர்கள் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.