கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி, சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார்.
சரியாக படிக்க முடியாததால் ஏற்பட்ட கவலையில் அந்த மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், வெளியில் சொல்ல முடியாத வேறு காரணங்களால் மாணவி மர்மமான முறையில் இறந்து விட்டதாக பெற்றோரும் கூறி வந்தனர்.
மாணவியின் மர்மச்சாவுக்கு நீதி கேட்டு பெற்றோர்கள் கடந்த 5 நாட்களாக அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று காலையில் போராட்டம் பெரும் கலவரமாக மாறியிருக்கிறது.
போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று, உயிரிழந்த மாணவியின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும், வன்முறை வெடித்ததால் உறவினர்கள் பாதி வழியில் திரும்பிவிட்டனர் என்றும், போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மாணவியின் தாய் செல்வி தெரிவித்திருப்பதாவது, “எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அமைதியான முறையிலேயே நீதியை பெற விரும்புகிறோம். வன்முறையை கைவிட்டு அமைதியாக போராட வேண்டும்” என்று மாணவியின் தாய் செல்வி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி வன்முறை – வாட்ஸ் அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராட்டம் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு அமைத்து திரண்ட போராட்டக்காரர்கள், ஒரே நாளில் 500 பேர் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று உளவுத்துறை விசாரணையில் தகவல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.