மதுரையில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாண உற்சவம், தேர்த்திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது.
இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்று வருகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் தொடங்கியது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தால் மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனை நேரில் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சர்க்கரை தீபம் ஏந்தி கோவிந்தா கோஷத்துடன் பக்கதர்கள் கள்ளழகரை வரவேற்றனர்.
அழகர்மலை நூபுர கங்கை தீர்த்தம் மூலம் கள்ளழகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, பச்சை பட்டுடுத்தி தங்கக்குதிரை வாகனத்திவல் எழுந்தருளியுள்ளார். தண்ணீரை பீய்ச்சியடித்தும் கருப்பண்ண சாமி வேடமிட்டும் அழகரை பக்தர்கள் வரவேற்று வருகின்றனர். வைகையாற்றில் தாமரை மலர்களால் நிரப்பப்பட்டிருக்கும் பகுதியில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகரை வரவேற்க வீரராகவ பெருமாள் வெள்ளிக் குதிரையில் வைகை ஆற்றில் காத்திருந்தது கண்கொள்ளாகாட்சி. தொடர்ந்து, அதிகாலை 5.50 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.பக்தர்கள் குவிந்து உற்சாக மிகுதியில் நடனமாடி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியபோது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்காக நள்ளிரவில் அழகருக்கு திருமஞ்சனம் நடைபெறும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்பட்டது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம் செய்ய தலைமை பட்டர் அலங்கார பொருட்கள் அடங்கிய பெட்டிக்குள் கையை விட்டு ஏதாவது ஒரு புடவையை எடுப்பார். அதில் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். தலைமை பட்டரின் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
சிவப்புப் பட்டு கட்டி வந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும். வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டி வந்தால், அந்த வருடத்தில் மங்களகரமான நிகழ்வுகள் அதிகம் நடக்கும் என்பது ஐதீகம். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக பக்தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வருவர்.இதனை நேர்த்தி கடனாக சாமி மீது பாய்ச்சுவதும் வழக்கமாக இருந்துவ் வருகிறது. பக்தர்களின் விரத வலிமைக்கு ஏற்ப அவரவர் தோல்பையில் இருந்து தண்ணீர் வெளியேறி சுவாமி மீது பட்டு அபிஷேகம் செய்யப்படும் என்பதும் ஐதீகம். நடப்பாண்டில் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் பீய்ச்சாமல் வழக்கமான தோல்பையில் சிறிய குழாய் மூலம் சுத்தமான தண்ணீரை பீய்ச்ச வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது..