மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு..!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. திமுகவுடன் செய்து கொண்ட கூட்டணி ஒப்பந்தப் படி மக்களவைத் தேர்தலில் மநீமவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றாலும் மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். மநீம கட்சியினர் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியினரோடு தேர்தல் பணிகளில் இணைந்து பணியாற்றினர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் கமல்ஹாசன், இந்தியன் 2 திரைப்பட வெளியீட்டு பணிகளில் தீவிரமானார். அதைத்தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படமும் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வருகிறது.

இந்த சூழலில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

மநீம கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம், மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், 1,414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2,570 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் மநீம தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுக்குழுவில் ஒருமனதாக கமல்ஹாசன் மீண்டும் மக்கள் நீதி மய்யம் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பல முக்கிய தீர்மானங்களும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.