டிச.,24ல் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு..!

சென்னை: டெல்லியில் டிசம்பர் 24-ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

மக்களவைத் தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறுவதையொட்டி, அதற்கான பணிகளை தற்போதில் இருந்தே அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமையும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே கடந்த நவம்பர் மாதம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன், கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு கடந்த 4-ம் தேதி கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்திலும் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று, பல்வேறு அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு வழங்கியிருந்தார்.

இந்நிலையில், 3-வது முறையாக மநீம கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை அண்ணாநகரில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் துணைத் துலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம், தொழிற்சங்க செயலாளர் பொன்னுசாமி உள்பட மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கட்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதேபோல் பூத் கமிட்டி அமைப்பது, மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் தொடர்பாக, கமல்ஹாசன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது.

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்த திசையில் பயணிக்கிறோம் என்று விரைவில் புரியவரும். ஓரிரு வாரங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். அத்தியாவசிய பொருட்கள் உட்பட எந்த ஒரு பொருட்களின் விலையையும் உடனடியாக ஏற்றிவிடக் கூடாது. அது தவறு’ என்றார்.

பின்னர் துணைத் தலைவர் மவுரியா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘வருகின்ற 24-ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பயணத்தில் டெல்லியில் கமல்ஹாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். ஜனநாயகத்தை பாதுகாக்கதான் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொள்கிறோம்’ என்றார்.