கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா போலீசார் 2 மணிநேரம் கிடுக்குப் பிடி விசாரணை..!

பெங்களூர்: கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, முடா வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா காவல்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா போலீசார் 2 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது சித்தராமையாவிடம் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

முடா என்பது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமாகும். இந்த முடா அமைப்பானது முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது.

முதல்வர் சித்தராமையா மனைவிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது சட்டவிரோதம் என்பது எதிர்க்கட்சிகளின் புகார். இது தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநரும் அனுமதி அளித்தார். இந்த அனுமதிக்கு எதிராக சித்தராமையா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி சித்தராமையா மீது அம்மாநில லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் விசாரணைக்கு ஆஜராக சித்தராமையாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனடிப்படையில் மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் சித்தராமையா நேற்று ஆஜரானார்.

முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா போலீசார் சுமார் 2 மணிநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது மொத்தம் 40 கேள்விகள் சித்தராமையாவிடம் கேட்கப்பட்டன. லோக் ஆயுக்தா எஸ்பி உதேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழு இந்த விசாரணையை நடத்தியது.

இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். லோக் ஆயுக்தா போலீசார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளேன். என்னுடைய பதில்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டன. அடுத்த விசாரணை குறித்து எதுவும் என்னிடம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.