கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் வாக்களிக்க உள்ளனர்.
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு இருந்து சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதாவது வரும் 10-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அதாவது இன்று 8-ம் தேதி மாலை 6 மணி முதல் 10-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது.
கருத்துக்கணிப்பு தொடர்பாக வீடியோ, விவாதம், உரையாடல் ஆகியவற்றை டி.வி சேனல்கள், ஊடகங்கள், ஆன்லைன் சேனல்கள், சமூகவலைத்தளங்களில் வெளியிடக் கூடாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 125-ன் கீழ் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது தடை செய்யப்படுகிறது.
இதை மீறி தேர்தல் முடிவை பாதிக்கும் வகையில் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவோர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126-வது பிரிவின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.