பெங்களூரு,-”மைசூரு மாநிலத்துக்கு ‘கர்நாடகா’ என பெயர் சூட்டப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது,” என கன்னடம், கலாச்சார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று கன்னடம், கலாச்சார துறை அதிகாரிகளுடன், அமைச்சர் சிவராஜ் தங்கடகி ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது: மைசூரு மாநிலம் 1973 அக்டோபர் 20ம் தேதி ‘கர்நாடகா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில், கலாச்சாரம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.இதற்காக பட்ஜெட்டில் கன்னடம், கலாச்சார துறைக்கு அதிக நிதி கோரப்படும்.
ரவீந்திர கலாசேத்ரா இருக்கைகள், ஒளி, ஒலி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுலா பயணியரை கவரும் வகையில், சாளுக்கியா உற்சவம், ஆனேகுந்தி உற்சவம், லக்குந்தி உற்சவம், ஹம்பி உற்சவம், நவரஸ்பூர் உற்சவம், கதம்பா உற்சவம், இட்டகி உற்சவம், கனககிரி உற்சவங்களை சரியான நாளில் கொண்டாட வேண்டும். இதற்கான அட்டவணையை தயாரிக்க வேண்டும்.ஒவ்வொரு மாதமும் வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த, சுற்றுலா துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.