காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா.. பரபரப்பான சூழ்நிலையில் 12 தமிழக எம்பிக்கள் சந்திக்கும் மத்திய அமைச்சரை..!

டெல்லி: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்றைய தினம் தமிழக எம்பிக்கள் குழு சந்தித்து காவிரியில் நீர் திறந்து விடுவது குறித்து பேசுகிறார்கள்.

தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கர்நாடகா அரசு திடீரென தண்ணீர் திறப்பதை நிறுத்தியது. இந்த நிலையில் 2 ஆவது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்ப தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மேலும் கர்நாடகாவில் அனைத்து கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியை ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகா அரசின் நீர் வளத் துறை செயலாளர் ராகேஷ் சிங் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த அவசர மனு மீதான விசாரணை வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. அதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் நீர் பங்கிட்டு விவகாரத்தை முடிக்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய நீர் வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் உத்தரவுபடி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது என அந்த ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார். இந்த சூழலில் தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளை சேர்ந்த 12 எம்பிக்கள் இன்று மாலை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுமாறு வலியுறுத்துகிறார்கள்.