பெங்களூரு: கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது.
இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட அரைமணி நேரத்திலேயே டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிகாலம் நிறைவடைய இருக்கும் நிலையில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரங்கள் கலைகட்டத் தொடங்கின.
காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக தேர்தலில் களம் கண்டதால் மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவற்றில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி பல்வேறு பரபரப்புகள் பாதுகாப்புகளுக்கு மத்தியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவற்றில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வென்றாலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெல்லாது என்று குறிப்பிடப்பட்டது. இதனால் மீண்டும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
டைம்ஸ் நவ், இந்தியா டுடே உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்று தகவல் வெளியாகின. இதற்கிடையே இன்று காலை பலத்து பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முன்னிலை நிலவரங்களின்படி காங்கிரஸ் 108 இடங்களிலும் பாஜக 87 இடங்களிலும் மஜத 26 இடங்களிலும், இதர 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இதற்கிடையே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடனே ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டங்கள் கலைகட்டி இருக்கின்றன. தேர்தலில் தங்கள் கட்சி வெல்வது உறுதி என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே இந்த கொண்டாட்டங்களுக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.