புதுடெல்லி: வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நாளை (டிச.16) நிறைவு பெறுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 17-ல் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி நவம்பர் 19-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நாளை (டிச. 16) நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
காசி தமிழ்ச் சங்கமத்தில் கடந்த 3 தினங்களாக தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் முக்கிய விருந்தினராக நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் சில காரணங்கள் கூறி அவர் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இயக்குநர்கள் சீனு ராமசாமி, மோகன்ஜி ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நாளிதழிடம் ‘திரவுபதி’ இயக்குநர் மோகன்ஜி கூறும்போது, ‘காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். சங்கமத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பில் கோயிலுக்கும் சென்று மகிழ்ந்தேன். தமிழ் மொழி, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு, உ.பி.யிலும் பரப்ப விரும்புவது வரவேற்கத்தக்கது. மிகவும் பெருமைக்குரிய விஷயம். இதனை நாட்டின் பிற மாநிலங்களிலும் மத்திய அரசு தொடர வேண்டும்’ என்றார்.
இந்நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெறும் இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சிக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒருநாள் முன்னதாக வாரணாசி வரவிருக்கிறார். இன்று வாரணாசி வரும் ஆளுநர் ரவி, மாலையில் இளையராஜா கச்சேரியை கோயிலில் அமர்ந்து ரசிக்க உள்ளார். மறுநாள் சங்கமம் நிறைவு விழாவில் பங்கேற்கும் அவர், டிசம்பர் 17 காலையில் சென்னை திரும்புகிறார்.
ஆளுநரின் வருகை காரணமாக இளையராஜாவின் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு பதிலாக 7.30 க்கு நடைபெறுகிறது. இந்த பக்தி இசை நிகழ்ச்சிக்கு டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இரா.முகுந்தன் தலைமையில் நிர்வாகிகள் குழுவும் வாரணாசிக்கு வருகை தருகிறது. கோவை முன்னாள் எம்பி. சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வருகை தந்தார். விஸ்வநாதர் கோயிலில் தமிழர்கள் மடமான நகரத்தார் சத்திரம் சார்பில் சிங்கார பூஜை நடைபெறுகிறது. இதற்கான சம்போ ஊர்வலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, காசி விஸ்வநாதரை வழிபட்டார். ஆளுநரின் வருகை காரணமாக இளையராஜாவின் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு பதிலாக 7.30-க்கு நடைபெறுகிறது.