ஈரோடு மாவட்டம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதம் செய்த கட்டையன் யானையை வனத்துறையினர் பிடித்து பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள மங்களப்பட்டி வனப்பகுதியில் விடுவித்தனர். தற்போது கட்டையன் யானை பவானிசாகர் அணை நீர் தேக்கத்தை ஒட்டியுள்ள சித்தன் குட்டை, அய்யம்பாளையம், ஜே.ஜே. நகர் உள்ளிட்ட கிராமங்களில் பகல் நேரத்தில் நுழைந்து தொடர்ச்சியாக பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ஊருக்குள் நுழையும் காட்டு யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் கட்டையன் யானையை கும்கி யானைகளை பயன்படுத்தி பிடிக்க திட்டமிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் இருந்து கபில்தேவ் மற்றும் முத்து ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே யானையை பிடிப்பதற்காக வனத்துறை அலுவலர்கள் மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் விளாமுண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கட்டையன் யானை நடமாடுகிறதா என வனப்பகுதிக்குள் சென்று தேடிப் பார்த்தனர். அப்போது பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் கட்டையன் யானை நடமாடுவதை கண்டுபிடித்தனர். மாலை நேரமாகிவிட்டதால் யானையை மயக்க பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் மீண்டும் யானையை கண்காணித்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.