கொச்சி:தந்தையால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 10 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 30 வார கருவைக் கலைக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, அவரது தந்தையால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். அவரது வயிற்றில் வளரும் 30 வார கருவை கலைக்க சிறுமியின் தாயார் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்குமாறு மருத்துவ குழுவினருக்கு பரிந்துரைத்தது. சிறுமியை பரிசோதித்த மருத்துவ குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையில், ‘அறுவை சிகிச்சை வாயிலாக கருவை கலைக்க முடியும். அப்போது வயிற்றில் உள்ள சிசு பிழைக்க 80 சதவீத வாய்ப்புள்ளது. சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது’ என தெரிவித்தது.இதையடுத்து, சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி அளித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.மேலும், ‘சிசு உயிருடன் பிறந்தால்,அதற்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க கேரள அரசும், மருத்துவமனை நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்’ என, உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.