சென்னை: கிருஷ்ணகிரி கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் இன்றைய அலுவல்கள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த ஜெகன் ஆணவ கொலை செய்யப்பட்டது தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.இந்நிலையில் இந்த தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஜெகனை பெண்ணின் தந்தை உள்ளிட்டோர் கொலை செய்தது பற்றி முதல்வர் விளக்கம் அளித்தார். கிருஷ்ணகிரி இளைஞர் ஜெகன் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது; குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அவதானப்பட்டி அதிமுக கிளை செயலாளர்.
அதிமுக கிளை செயலாளர் சங்கர் உள்ளிட்ட 3 பேர் தாக்கியதில் ஜெகன் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற கொலை சம்பவங்களை அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மனிதநேயத்துடன் தடுக்க முன்வர வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும். சமூக நீதி காக்கும் மண்ணான தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறினார்.
இளைஞர் கொலையில் அதிமுக கிளை செயலாளர் சங்கருக்கு தொடர்பு என முதல்வர் பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பான முதல்வர் விளக்கத்திற்கு எதிராக பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் விளக்கம் அளித்த பிறகு அதிமுகவினர் பேச முற்படுவதால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.