2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்து உள்ள பிரதமர் நரேந்திர மோடி மோடி இன்று தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார்.
நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.கவின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அதன் பின்னர் அங்கிருந்து நேற்று மதுரை புறப்பட்ட அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் மீனாட்சியம்மன் கோயில் சென்றார். இதனை அடுத்து இன்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்த அவர், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள துறைமுக பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று ரூ.17,300 கோடி மதிப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
குலசேகரன்பட்டினத்தில் புதிதாக அமைய இருக்கும் இஸ்ரோ ராக்கெட் ஏவுதள பணி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக விரிவாக்க திட்டம், வெளித் துறைமுக சரக்கு பெட்டக முனையங்கள் அமைப்பது, வடக்கு சரக்கு கப்பல் தளம் எண்: 3 இயந்திர மயமாக்குவது, ஒரு நாளைக்கு 5 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.550 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள புதிய ரயில்வே தூக்கு பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து, நீர் வழிகள் மற்றும் ஆயூஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த பணிகள் நிறைவடைந்து கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது. பிரதமர் வருகை அடுத்து தூத்துக்குடியில் தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் .