சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ்… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்து.!!

பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூப்பர் சவுக்கு சங்கரை ,குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12 அன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்கக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்து கொள்வார்? என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு உத்தரவிட்டு, இறுதி விசாரணை இன்று நடைபெறும் என அறிவித்திருந்தது.
இந்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “சவுக்கு சங்கரின் செயல்பாடுகளால் எந்தவொரு சட்டம் – ஒழுங்கும் சீர்குலையவில்லை. பொது சொத்துகளுக்கும் சேதம் ஏற்படவில்லை. குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கும் முன்புதான் அவர் மீது 4 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அந்த வழக்குகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடவில்லை. எனவே, அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்றியே அவர் மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கரின் அவதூறு கருத்துகளால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என்றார்.இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரியும் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் சார்பில் வழக்கறிஞர் செல்வி ஜார்ஜூம், தமிழர் முன்னேற்றப் படைத் தலைவரான வீரலட்சுமி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரனும் ஆஜராகி கோரிக்கை விடுத்தனர்.அப்போது அவர்கள், மிரட்டல் செய்து பணம் பறிக்கும் சவுக்கு சங்கரால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்களையும் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக இணைக்க வேண்டும் என கோரினர். மேலும், தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள், காவல் துறையினர் மற்றும் நீதித் துறையினர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதால், சவுக்கு சங்கர் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக இறுதி விசாரணை நடத்துவது தொடர்பாக தனக்கும், சக நீதிபதியான பி.பி.பாலாஜிக்கும் இடையே மாறுபட்ட கருத்து உள்ளதாகவும், எனவே இந்த வழக்கில் இன்று பிற்பகலில் மாறுபட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், விசாரணையை தள்ளி வைத்தார்.இதற்கிடையில், கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அளித்த புகார் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கர் தாயார் கொடுத்த புகார் மனு குறித்து நான்கு மாதங்களில் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.