மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தங்கரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது. இதையடுத்து அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநரான இல.கணேசனுக்கு மேற்கு வங்கத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. நிரந்தர ஏற்பாடு செய்யும் வரை இல கணேசன் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்புகளை மேற்கொள்வார் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இல கணேசன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் கட்சியாகவும், பாஜக எதிர்க்கட்சியாகவும் உள்ளது.பொதுவாகவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் உரசல் போக்கு நிலவுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக இந்த மோதல் உச்சம் கண்ட மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. இந்நிலையில், இல கணேசன் மற்றும் மம்தா இடையேயான உறவு எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த இல கணேசன் அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டு, இளம் வயது முதலே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து செயல்பட்டவர். பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், 1991ம் ஆண்டு மாநில அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார், கட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட்டதால், அடுத்தடுத்து பாஜக மாநில தலைவர் மற்றும் தேசிய துணை தலைவர் பதவிகளையும் பெற்றார். 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய இல.கணேசன், 2016ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2021ஆம் ஆண்டில் இவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.