உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018 – ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. முதல் கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக் கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் – கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து முடிந்தது. மேலும், உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் நடந்து முடிந்தது. அதே போல் உக்கடம் பஸ் நிலையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளும் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளன.
இதனிடையே, ரூ.265.44 கோடியில் உக்கடம் – ஆத்துப்பாலம் 2 – ம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்கு தளமும் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது.
2 – ம் கட்ட மேம்பால பணிகள் நிலம் கையகப்படுத்தும் பணி காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. நொய்யல் ஆற்றில் பில்லர் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் அதனை அடுத்து வரும் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிடப்பில் உள்ளது. இதன் காரணமாக மேம்பால பணிகள் கடந்த சில மாத காலமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறும்போது:-
உக்கடம் -ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் 2 இடங்களில் ஏறு தளமும், 2 இடங்களில் இறங்குதளமும் 5.50 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது. 2-ம் கட்ட மேம்பால பணிகள் தொடர்பாக பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முன்பே முடிந்து இருக்க வேண்டும். அது கிடப்பில் கிடந்தது. கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து மேம்பாலம் டிசம்பர் மாதம் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தனர்.