ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரின் பந்திப்போராவில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதியும், கமாண்டருமான அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீர் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் பொறுப்பேற்ற நிலையில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்து கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 22 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. தற்போது வரை எந்த பயங்கரவாதிகளும் சிக்கவில்லை. அவர்களை தேடும் பணியில் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் ராணுவத்துக்கு இன்று காலையில் ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியும், அந்த அமைப்பின் கமாண்டருமான அல்தாப் லல்லி பந்திப்போராவில் பதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவத்தினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் அவரை தேடும் பணியில் பந்திப்போராவில் மேற்கொண்டனர். தீவிரமாக தேடுதல் பணி நடந்தது.
அப்போது ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பதிலுக்கு ராணுவம், போலீசார் இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் இ தொய்பாவின் கமாண்டரான அல்தாப் லல்லி என்பவர் இறந்தார். ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உடலில் குண்டு பாய்ந்து அவர் இறந்தார். இதன்மூலம் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்ற பிறகு முதல் முறையாக லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதியை ராணுவம் கொன்றுள்ளது.