கோவில் வளாகத்திலேயே வர்காரியா சமூகத்தினர் மீது லத்தி சார்ஜ்.. மகாராஷ்டிரா போலீசார் மறுப்பு.!!

காராஷ்டிராவில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யப்பட்டதாக, மாநில அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மகாராஷ்டிராவில் விட்டலை கடவுளாக பாவித்து வழிபடுபவர்கள் வர்காரிய சமூகத்தினர் என குறிப்பிடப்படுகின்றனர். ​இவர்கள் பந்தர்பூருக்கு வரி எனப்படும் வருடாந்திர ஆஷாதி ஏகாதசி யாத்திரையின் மேற்கொள்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக புனே நகரத்திலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆலந்தி நகரில் உள்ள புனிதர் ஞானேஸ்வர் மகாராஜ் நினைவிடத்தில், சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று புனிதர் ஞானேஸ்வர் மகாராஜ் நினைவிடத்தில் வழிபாடு நடத்த, வர்காரியா மக்கள் ஏராளமானோர் ஆலந்தி நகரில் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே நினைவிடத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கிருந்த அனைவரும் உள்ளே நுழைய முற்பட்டனர். ஒருகட்டத்திற்கு மேல் போலீசாரின் தடுப்பையும் மீறி உள்ளே நுழைய முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த லேசான தடியடி நடத்தப்பட்டது. பின்பு லத்திகளை கொண்டு கூட்டத்தை பின்னோக்கி தள்ளி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. பந்தர்பூருக்கு செல்லும் வரி எனும் யாத்திரையின் ஒரு பகுதியாக புனிதர் ஞானேஸ்வர் மகாராஜ் நினைவிடத்திற்கு வர்காரியா மக்கள் செல்வது என்பது நூறாண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்படும் ஒரு வழக்கம். அப்படி இருக்கையில் அவர்களுக்கு போதுமான ஏற்பாடுகளை செய்து தராமல், பக்தர்கள் மீது ஏக்நாத் ஷிண்டே மற்றும் பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி தடியடி நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

சம்பவம் தொடர்பாக பதில் அளித்துள்ள மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், கடந்த ஆண்டு ஆலந்தி நகரில் நடைபெற்ற சம்பவத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு குழுவிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டும் பாஸ் வழங்கி நினைவிடத்திற்குள் அனுமதிக்க முடிவு செய்தோம். அதன்படி ஒவ்வொரு குழுவை சேர்ந்த 75 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டது. ஆனால், அந்த யாத்திரையில் பங்கேற்ற சுமார் 500 இளைஞர்கள் பாஸ் முறையை பின்பற்றாமல் உள்ளே நுழைய முயன்றனர். அங்கிருந்த தடுப்புகளையும் உடைத்தனர். அவர்களை தடுக்க முயன்ற போலீசார் சிலர் காயமடைந்தனர். ஆனாலும், பக்தர்கள் மீது தடியடி எதுவும் நடத்தபடவில்லை, லேசான தள்ளுமுள்ளு மட்டுமே ஏற்பட்டது” என்றும் விளக்கமளித்தார்.