பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் என்று கூறினார்.
மேலும், நடைபயணம் நிறைவு நாளில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று கூறினார்.
தமிழக பா.ஜ.க அண்ணாமலை, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா குறித்து பேசிய கருத்துகளால் 2019-ம் ஆண்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வந்த அ.தி.மு.க கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறியது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய கட்சியான அ.தி.மு.க வெளியேறியிருப்பது பா.ஜ.க-வுக்கு பெரும் இழப்பு என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரித்தனர்.
பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறியதற்கு காரணம், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பேச்சுதான் காரணம் என்றும் பேசப்பட்டது.
இதையடுத்து, அண்ணாமலை பா.ஜ.க தேசியத் தலைமையால் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். இதையடுத்து, அண்ணாமலை டெல்லிக்கு சென்று பி.எல். சந்தோஷ், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்தார். அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், நிர்மலா சீதாராமன் தமிழகம் வந்து கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜ.க நிர்வாகிகளையும் சந்தித்தார்.
இதனிடையே, அண்ணாமலை டெல்லி சென்றிருந்ததால், அண்ணாமலை தலைமையில் சென்னையில் அக்டோபர் 3-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, பா.ஜ.க மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்டோபர் 5) காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வியாழக்கிழமை காலை தமிழக பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்திருந்தனர். காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அண்ணாமலை வராததால் கூட்டம் தொடங்க தாமதம் ஏற்பட்டது. ஆனால் அண்ணாமலை வர அதிக நேரம் ஆனதாலும், ஒரு மணிநேரத்திற்கு மேலாகும் என்ற தகவலாலும் அங்கிருந்து கேசவ விநாயகமும், எச்.ராஜாவும் வந்தே மாதரம் பாடலைப் பாடி கூட்டத்தைத் தொடங்கினர்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வருவதற்குள் கூட்டம் தொடங்கினாலும் பின்னர், அண்ணாமலை வந்து கூட்டத்தில் கலந்துகொண்டார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக பா.ஜ.க மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் மற்றும் மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், கே.பி. ராமலிங்கம், வி.பி. துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், தமிழகத்தில் பா.ஜ.க தனித்து போட்டியிடுவது புதிதல்ல. எதற்கும் தயாராக இருக்கவேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க பலமுறை தனித்து போட்டியிட்டுள்ளதாக கூறினார்.
முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பா.ஜ.க துணைத் தலைவர்கள், மாநில தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று கூறினர். கூட்டணி பற்றி தேசிய தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்றும் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் கூறினார். அதே போல அண்ணாமலை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும் துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார்.
இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவர்களின் விருப்பம், அதைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும். கூட்டணி பிரச்னையில் எனது முடிவை பா.ஜ.க தலைமையிடம் நான் ஆழமாக தெரிவித்துவிட்டேன். இனி கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவெடுக்கும்.” என்று கூறினார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும். ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் முடிவடையும் நிறைவு நாளில் வருகிற ஜனவரி இறுதியில் பிரதமர் மோடி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். சென்னையில் நடைபெற உள்ள நடைபயண நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும். தேர்தல் வருவதையொட்டி அடுத்த 7 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பெண்களை அதிக எண்ணிக்கையில் பூத் கமிட்டியில் சேர்க்க வேண்டும்” என்று பேசினார்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அண்ணாமலையிடம் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை: “அதை எதற்கு ஊடகங்களிடம் சொல்ல வேண்டும். தமிழக மக்களிடத்தில் எப்போது சொல்ல வேண்டுமோ, அப்போது சொல்கிறேன். பா.ஜ.க கட்சி எப்படி தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தப் பாதையில் செல்ல வேண்டும். 2024 தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் கிடையாது. கட்சியின் தலைவர்களுடன் உள்ளரங்கில் விவாதிக்கப்பட வேண்டிய நிகழ்வு.
பாஜகவைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணி 1998-ல் ஆரம்பிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக என்.டி.ஏ இருக்கிறது. வெவ்வேறு காலகட்டத்தில் என்.டி.ஏ-வின் தன்மை மாறியிருக்கிறது. நிறைய கட்சிகள் வந்துள்ளனர்.நிறைய கட்சிகள் சென்றுள்ளனர். நிறைய கட்சிகள் பரிமாணத்தோடு மீண்டும் வந்திருக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி 2024-ல், தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்காக மிகப்பெரிய அளவில் இங்கிருந்து மக்களவை உறுப்பினர்களை அனுப்பிவைக்கும். மற்றபடி இந்தக் கூட்டத்தில் என்ன பேசினோம். தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது எல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க வேண்டிய விஷயம் இல்லை.
பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, என்.டி.ஏ-வை பிரதானப்படுத்திச் செல்கிறோம். 2024-ல் பா.ஜ.க நிச்சயமாக, தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை இங்கு முன்னெடுக்கும். அதற்கான அறிகுறிகள் தேர்தலுக்கு முன்பே தெரியும். 2024-ல் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் வாக்கு சதவீதத்தையும் நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று கூறினார்.
அப்போது, பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க இல்லை என்று வருத்தப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்தந்த கட்சிகள், அந்தந்த கட்சியின் வளர்ச்சியைத்தான் பார்க்க வேண்டும். பா.ஜ.க தன்னுடைய வளர்ச்சியைப் பார்க்கிறது. இதில் வருத்தப்படவோ, சந்தோஷப்படவோ ஒன்றும் இல்லை. நான், ஒருவர் இருக்கிறார் என்பதற்காக சந்தோஷப்பட்டதும் இல்லை, சென்றுவிட்டனர் என்பதற்காக வருத்தப்பட்டதும் இல்லை.
என்னுடைய ஒரே நோக்கம், பாஜக வலிமை அடைய வேண்டும் என்பது மட்டும்தான். அதுவே தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் நோக்கமாக இருக்கிறது. 2024 என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்கான தேர்தல். தமிழகத்தில் 2024-ல், தமிழகத்தில் 39-க்கு 39 நரேந்திர மோடியின் பக்கம் வரும்” என்றார்.
அ.தி.மு.க தலைவர்களை விமர்சிப்பதாக, உங்கள் மீது குற்றம்சாட்டி கூட்டணி உடைக்கப்பட்டுள்ளதே என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “என் மீது இந்த குற்றச்சாட்டு மட்டும் இல்லை. தமிழகத்தில் உள்ள பல கட்சிகள், பல குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். அதற்கெல்லாம் பதிலளிப்பது எல்லாம் சரியாக இருக்காது. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் செல்ல வேண்டிய பாதையில் தெளிவாக இருக்கிறேன். எந்தப் பாதையில் பாஜக செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். எனவே, என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், அவதூறுகள் குறித்து நான் பொருட்படுத்துவது இல்லை. அதற்கெல்லாம் நான் பதிலும் சொல்வதில்லை. எனவே, இந்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார்.
அ.தி.மு.க கூட்டணி முறிவு குறித்து அக்கட்சியினர் கருத்துக் கூறி வரும் நிலையில், பாஜக அமைதி காப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இதில் அமைதி காப்பதற்கு ஒன்றும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை, 2024-ல் எங்கள் கட்சியைச் சார்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். இது எங்களுடைய கல்யாணம், எங்களுக்கான தேர்தல். அதற்கான வேலைகளை நாங்கள் செய்யப் போகிறோம்” என்றார்.
அப்போது அ.தி.மு.க-வின் வெற்றிக்கு பா.ஜ.க தடையாக இருந்ததா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இதற்கு எல்லாம் ஒரே தீர்வு, 2024 தேர்தல் முடிவுகள்தான். அந்த முடிவு தெரியாமல், யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் கூறலாம். உள்ளாட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களில் பா.ஜ.க தனியாக சென்றதால்தான், மூன்றாவது பெரிய கட்சியாக உருவாகியது. எனவே, 2024 தேர்தல் முடிவுகள் வரட்டும். இது மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என்பதற்கான தேர்தல். எனவே, இந்த தேர்தல் முடிவுகள், பா.ஜ.க-வுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆதரவாகத்தான் இருக்கும்” என்றார்.
அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் அ.தி.மு.க-வா, பா.ஜ.க-வா என்று சவால் விடுக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “தி.மு.க.வா, பா.ஜ.க-வா என்பதுதான் சவால். தி.மு.க தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பா.ஜ.க மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. போட்டி எங்கள் இருவருக்கும்தான். இதை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறி வருகிறேன். இன்றைக்கு மட்டும் சொல்லவில்லை. தி.மு.க-வா, பா.ஜ.க-வா என்று சவால். 2024 தேர்தலில் அதை பார்த்துவிடலாம்: என்று அவர் கூறினார்.
அதே போல, இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: “தமிழகத்தில் பா.ஜ.க வெற்றிகரமாக அடியெடுத்து வைக்க வேண்டும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை இருக்கக் கூடிய இந்த 7 மாத காலம், அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பணிகள் இன்றைய கூட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு, பாஜகவைச் சேர்ந்தவர்கள் முழுமூச்சோடு, வேகத்தோடு, ஈடுபாட்டோடு களம் இறங்கி பணிபுரிய வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.” என்று கூறினார்.
அ.தி.மு.க கூட்டணி குறித்து இந்தக் கூட்டத்தில் ஏதாவது விவாதிக்கப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், “அ.தி.மு.க கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பா.ஜ.க-வை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கெனவே இருக்கிறது. அந்தக் கூட்டணியின் அடிப்படையில், என்னென்ன விஷயங்களை பா.ஜ.க கடைபிடிக்க வேண்டும். எப்படியெல்லாம் இந்தக் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.” என்று கூறினார்.
அ.தி.மு.க தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டது. பா.ஜ.க முடிவெடுப்பதற்கு காலதாமதமாவது என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், “இதில் இப்போது சொல்லவேண்டிய விஷயங்கள் ஒன்றும் கிடையாது. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் வருகிறது. அதற்கு முன்பாக 5 மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 5 மாநிலத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் பா.ஜ.க இருந்து வருகிறது” என்றார்.
பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறியதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இதில் யாருக்கு முன்னடைவு என்றெல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. எங்களை வலிமைப்படுத்தக் கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறோம். அது நிச்சயமாக இந்த இரண்டு மாதங்களுக்குள் முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று கூறினார்.
அ.தி.மு.க-வின் வெற்றிக்கு பா.ஜ.க தடையாக இருந்ததாக நத்தம் விஸ்வநாதன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், “அ.தி.மு.க-வில் 2 கோடி பேர் உள்ளதாக கூறுகிறார்கள்; 2 கோடி கருத்துகள் வர முடியும். எங்கள் கட்சியில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களிடம் இருந்தும் லட்சக்கணக்கான கருத்துகள் வரும். இந்த ஒவ்வொரு கருத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது.” என்று கூறினார்.
பா.ஜ.க தனித்து போட்டியிட தயாரா என்ற கேள்விக்கு, “1996-ம் ஆண்டு தனித்து போட்டியிட்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வென்றது உங்களுக்கு தெரியும்; அதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை.” என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
பா.ஜ.க தலைமையுடன் பேசுவதாக ஓ.பி.எஸ் சொல்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், “பலபேர் பலவித கருத்துகளை சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இதை பற்றி ஊடகங்கள் முன் பேசுவது எந்த விதத்தில் சரி. கூட்டணி என்பது டீ குடிப்பது போல் பேசிவிட்டு போவது கிடையாது.” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க உடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், “ஏற்கெனவே சில கட்சிகள் நம் கூட்டணியில் உள்ளனர். அவர்களின் கருத்துகளை முழுமையாக கேட்கவில்லை. அவர்களிடம் பேசி முடிவெடுக்கப்படும்.” என்று கூறினார்.
பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இல்லாதபோது தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியே கிடையாது என கிருஷ்ணசாமி சொல்லி உள்ளது குறித்து கருத்து தெரிவித்த பொன். ராதாகிருஷ்ணன், “என்.டி.ஏ என்பது ஒரு கட்சி அல்ல; இது தேசிய அளவிலானது. தமிழ்நாட்டுக்கு என்று தனி என்.டி.ஏ கிடையாது.” என்று கூறினார்.
அண்ணாமலை செயல்பாடுகளால் பா.ஜ.க தலைவர்களே அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆளுநர் ஆகி உள்ளார். அவருக்கு என்ன கருத்து உள்ளது என்று எனக்கு தெரியவில்லை, மரியாதைக்குரிய சி.பி. ராதகிருஷ்ணன் மூத்த தலைவர் அவருக்கு என்ன கருத்து இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. நான் மூத்த தலைவர் என நீங்கள் நினைக்கிறீர்களா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. நான் உங்கள் முன் பேசிக் கொண்டு இருக்கிறேன்” என கூறினார்.